மகப்பேறு வார்டில் கட்டில் உடைந்ததால் தாய்-பச்சிளம் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பரங்கிலி நாதபுரத்தில் வசித்து வருபவர்கள் முனிசாமி-முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்கு விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து முத்துலெட்சுமி மகப்பேறு வார்டில் குழந்தையுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு குழந்தையுடன் அவர் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைத்து விழுந்தது . அப்போது இருவரும் கீழே விழுந்ததில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது தலையில் அடிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குழந்தை மற்றும் தாயை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மருத்துவமனை டீன் சங்குமணி கூறியதில் பிறந்த குழந்தையை பார்க்க வருபவர்கள் அமர்ந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் உறவினர்கள் அமர்ந்ததால் கட்டில் உடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உறைவிட மருத்துவர் டாக்டர் முருகேசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
அந்த விசாரணையில் மகப்பேறு பிரிவில் 30 படுக்கை உள்ளன. படுக்கைகள் உறுதியாக உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படும். அதே போல பழுதாகி உள்ள கட்டிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.