கடப்பாரையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காராம்பட்டி பகுதியில் சின்ன கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா(56) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே மின்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் லட்சுமி செய்வினை வைத்ததால் தான் தனது மகள் இறந்ததாக கூறி கருப்பையா அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் ஆண்டிச்சி என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் காராம்பட்டி கண்மாய் கரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த கருப்பையா லட்சுமியிடம் தகராறு செய்து அவரை கடப்பாரையால் அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை தடுக்க முயன்ற ஆண்டிச்சியையும் கருப்பையா தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ஆண்டிச்சியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.