ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. அப்படி இந்த உலகில் முக்கியமாக விளங்கும் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அதில் இப்போது பைக் ரேஸ்களில் சாதனை படைத்த பெண்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.
பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெண்களை பார்ப்பது இந்த காலத்தில் அரிதாக இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
ரோஷினி சர்மா
தனது 16 வயதிலேயே பைக் ஓட்ட தொடங்கியவர் ரோஷினி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 11 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிக்கொண்டு இந்தியாவின் இரு முனைகளையும் தொட்ட முதல் பெண் சாதனையாளர் இவர். அப்போது அவருக்கு வயது 26. இந்தியாவில் பெண்கள் தனியாக பயணிப்பது ஆபத்தானது என்ற அச்சத்தை போக்கவே முன்னுதாரணமாக இச்சாதனையை செய்ததாக இவர் கூறினார்.
கேண்டிடா லூயிஸ்
பெங்களூருவை சேர்ந்த கேண்டிடா பெங்களூருவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை பைக் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சாகசப் பயணத்தில் இந்தியா, பூடான், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய 10 நாடுகள் வழியாக 29,200 கிலோமீட்டர் தொலைவுக்கு பைக்கில் பயணித்துள்ளார்.
டாக்டர் நெகாரிகா யாதவ்
பல் மருத்துவராக பணியாற்றினாலும் பைக் ஓட்டுவது தான் டாக்டர் நெகாரிகாவுக்கு மிகவும் பிடித்தமானது. 97 ஆண்கள் பங்கேற்ற ‘2015 கேடிஎம் ஓபன் டிராக்’ பைக் பந்தயத்தில் 20ஆம் இடத்தை பிடித்து இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக்கர் என்ற பட்டத்தை வென்றவர்.
ஐஸ்வர்யா பிஸ்ஸே
கரடுமுரடான பாதைகளில் நடக்கும் பந்தயங்களில் பெரும் ஆர்வம் கொண்டவர் ஐஸ்வர்யா ‘ TVS ஒன்- மேக் ரேஸ் சாம்பியன் ஷிப் ‘ போட்டியில் தனது 21ஆம் வயதில் முதல் முறையாக பைக்குடன் களம் இறங்கிய ஐஸ்வர்யா 24ஆம் வயதில் ஸ்பெயினில் நடந்த பஜாஜ் ஆரோ கான் எஃப்ஐஎம் சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வென்று, இதில் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
டாக்டர் சரிகா மேத்தா
இந்தியா, மியான்மர், லாவோஸ், நேபாளம், பூட்டான், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வழியாக பைக் ஓட்டி சென்ற முதல் இந்தியப் பெண் சரிகா மேத்தா தான். பெண்களால் எதுவும் முடியும் என்று நிரூபிக்க இவர் ‘பைக்கிங் குயின்ஸ்’ குழுவை நிறுவினார். இந்திய அரசின் ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ திட்டத்தில் விளம்பரத் தூதராகவும் இவரும் உள்ளார்.
அனம் ஹாசிம்
2017 இல் நடந்த சர்வதேச ஸ்டண்ட் போட்டியில் பங்கேற்று வென்ற ஒரே இந்திய பெண் அனம் ஹாசிம். டிவிஎஸ் ஸ்கூட்டி வாகனத்தில் 2,250 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து உலகின் உயரமான சாலை அமைந்துள்ள ‘கார்துங் லாவை’ அடைந்த முதல் பெண்ணும் இவர்தான்.
அலிஷா அப்துல்லா
அதிவேக பைக்குகளில் ஒருவரான அலிஷா அப்துல்லா இந்தியாவில் முதல் பெண் தேசிய ரேசிங் சாம்பியன் ஆவார். அப்போது அவருக்கு வயது 13. அவர் MRF நேஷனல் கோ – கார்டிங் சாம்பியன்ஷிப்பை வென்றார். தேசிய அளவிலான ஃபார்முலா கார் பந்தயத்தில் பெஸ்ட் நொவைஸ் அவார்ட் வென்றுள்ளார்.