மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவில் ஓய்வுபெற்ற பேராசிரியரான சூரிய சந்திரர் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சந்திர செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து சந்திர செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.