மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் 37 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2007-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 14 வயதில் எனக்கு மகள் இருக்கிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த எனது கணவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து என்னையும், மகளையும் அடித்து துன்புறுத்தினார்.
இதனால் படுகாயமடைந்த நான் கோபியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனால் எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை பெற விடாமல் என்னை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றியதால் கவுந்தம்பாடியில் வாடகை வீட்டில் நான் எனது மகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் தாக்கியதால் வயிற்று பகுதியில் இருக்கும் குடலிலும், பித்தப்பையிலும் படுகாயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் 7 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறுகின்றனர்.
எனது கணவர் எந்த ஒரு உதவியும் செய்வதில்லை. என்னால் சிகிச்சைக்கான பணத்தை திரட்ட இயலாது. அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் இறந்துவிட்டால் எனது மகள் அனாதையாகி விடுவாள். எனவே எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்னையும், எனது மகளையும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.