மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோரை வேண்டாம் என்று காதல் கணவருடன் மகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்கா மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்பின் இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காயத்ரியின் பெற்றோர் தங்கள் மகள் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் காதால் ஜோடியை அழைத்து விசாரித்தபோது, காயத்ரி, தன் காதலருடன் செல்வதாக கூறியதால் போலீசார் அவரை நித்தியானந்தனுடன் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து செல்போன் கடையின் உரிமையாளரும், காயத்ரி மாமாவுமான சதிஷ், நித்யானந்தனை தொடர்பு கொண்டு உங்களை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.
ஆனால் ரங்கமலை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்ரிக்கும், அவர் பெற்றோரின் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட காதல் ஜோடி ரங்கமலை பகுதிக்கு காரில் வந்து கொண்டிருந்த போது வழியில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சிலர் காயத்ரியை கடத்தி சென்றுள்ளனர். இதனால் நித்தியானந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காயத்ரியின் பெற்றோர் தங்கள் மகளிடம் நித்யானந்தனை மறந்து விடுமாறு கூறியுள்ளனர்.
காயத்ரியும் அதற்கு ஒப்புக் கொண்டதால் பெற்றோர் நம்பிக்கையோடு இருந்துள்ளனர். காயத்ரி கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு சென்றபோது, நீதிபதி காயத்ரியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் தன் காதல் கணவருடன் செல்வதாக கூறியதால், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் நீதிபதி அவரை நித்யானந்தனுடன் அனுப்பி வைத்துள்ளார்.