ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் எத்திராஜ் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அந்த வீட்டு சாவியை கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரான விஜயன் என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு சென்ற விஜயன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விஜயன் இதுகுறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 80,000 ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.