கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தும்பை கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் சுவாதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சுவாதியை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுவாதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.