மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி 45 வயதுடைய ரோகிணி பிரியா. இவர் நாகர்கோயில் இருக்கின்ற ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகள் 13 வயதுடைய அர்ச்சனா. இவர் அருகில் இருக்கின்ற தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ரமேஷின் வீட்டின் அருகே அவருடைய அண்ணன் மகாத்மா, அக்காள் லதா ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே காம்பவுண்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக சரிவர பேசவில்லை.
மேலும் ரமேஷின் மற்றொரு அண்ணன் சுவாமி என்பவர் மார்த்தாண்டத்தில் நகைக்கடை நடத்தி வருகின்றார். ரோகினி பிரியாவின் அக்கா மேகலா நாகர்கோவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ரோகிணி பிரியாவின் செல்போனுக்கு மேகலா தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை அதன்பின் அவருடைய கணவருக்கு போன் செய்தார். அவரும் எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவருடைய அக்கா ரமேஷின் அண்ணன் மகாத்மாவை தொடர்பு கொண்டு பேசினார். உடனே ரமேஷ் வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.
இதனை அடுத்து அங்கு சென்ற மகாத்மா போய் பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரே சேலையில் ரமேஷும் அவருடைய மனைவி ரோகினி பிரியாவும் தூக்கில் பிணமாக தொங்கினார். கட்டிலில் அர்ச்சனா இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து கதறி அழுத அவருடைய அண்ணன் அருகில் இருந்தவர்களுக்கும், காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ், ரோகினி பிரியா, அர்ச்சனா 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் காவல்துறையினர் வீட்டிற்குள் சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு கடிதம் சிக்கியது. அதை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சொத்து யாருக்கு என்பது பற்றிய விவரம் மற்றும் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலில் அர்ச்சனாவுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ஒரே சேலையில் இருவரும் தூக்குப்போட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.
மேலும் அர்ச்சனாவின் பிணம் அருகே விஷ பாட்டில் செவ்வாழை பழம் கிடந்தது. அதனை காவல் துறையினர் கைப்பற்றினர். சொத்துக்கள் பற்றிய விபரத்தை எழுதிய ரமேஷ் வாழ பிடிக்காமல் தன்னுடைய குடும்பத்தை அழித்துக் கொண்டு உள்ளோம். ஆனால் அதற்கு யாரும் காரணம் இல்லை. இந்த விபரீத முடிவுக்கு குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.