கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெருவில் லாரி ஓட்டுநரான செந்தில்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் சிறுமி அந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த சுஜாதா அவரை கண்டித்துள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றார் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மகள் காணாமல் போனதால் மன உளைச்சலில் இருந்த சுஜாதா வீட்டில் இருந்த விஷம் மருந்தை குடித்தார். மேலும் தனது கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அதனை சுஜாதாவும் சாப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தம்பதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுமி செல்போனில் வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றார் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இனி மாணவியுடன் பேசக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனாலும் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். எனவே தங்களது மகள் வாலிபருடன் ஓடி இருக்கலாம் என நினைத்து மன உளைச்சலில் சுஜாதா தனது கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் அதனை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.