சிவகங்கை காரைக்குடியில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
சிவகங்கையில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து சிவனுக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகளையும், அபிஷேகங்களையும் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்து உள்ள காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில், சுவாமி கைலாசநாதர் கோவில், சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவில், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவில், இரணியூர் ஆட்கொண்டநாதர் கோவில், வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உள்ள மருதீசர், திருவீசர் சன்னதி, வேலங்குடி கண்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் நேற்று மகாசிவராத்திரி கோலாகலமாக நடைபெற்றது.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில்கள் மின்விளக்குகளால் ஜொலித்தது. மாலை 6 மணிக்கு முதல் பூஜையும், இரண்டாம் கால பூஜை இரவு 10 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், நான்காம் கால பூஜை நள்ளிரவு 3 மணிக்கும் நடைபெற்றது. மகா சிவராத்திரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசித்தனர். பக்தர்கள் சிவபெருமானின் பக்தி பாடல்கள் பாடியும், சிவ புராணம் பாடியும் மகிழ்ந்தனர். காரைக்குடி பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம் இரண்டாவது வீதியில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சத்தியசாய் சேவா சமிதி கோவிலில் மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை லிங்கங்களுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபாடு செய்துள்ளனர். இந்த விழாவின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது.