மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று நடை திறக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது .
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மகாசிவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பக்தர்களுக்கு கோவில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4 மணி வரை ,ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.
கோவிலில் உள்ள சுவாமியும் , அம்பாள்ளும் தங்கக் கேடயத்தில் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவிலிலிருந்து ரதவீதி , நடுத்தெரு மற்றும் திட்டக்குடி சந்திப்பு சாலை ஆகிய வழிகளில் வந்து கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு காட்சியளிப்பர். பின் மாலை 6 மணி அளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடை பெற்று இரவு 10 மணி அளவில் சுவாமி கோவிலுக்கு வந்தடையும். இதன் காரணமாக பக்தர்களுக்கு இன்று சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.