பா.ஜ.க மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது “கடந்த 2014ஆம் வருடம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக 2021-2026ஆம் வருடங்களில் கிராமங்களுக்காக ரூபாய் 7,192 கோடியும், நகரங்களுக்காக ரூபாய் 1,41,678 கோடியும் செலவிடப்பட இருக்கிறது. இதன் வாயிலாக நாடு முழுதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன.
மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக திடக்கழிவு, நீர் கழிவு மேலாண்மை திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் வரலாற்றில் தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட வரலாறாக தூய்மை இந்தியா திட்டம் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு காலக்கட்டத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் மோசமாக விமர்சனம் செய்தது. ஆனால் இது தற்போது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. பிரதமரின் தீவிர நடவடிக்கைகளால் மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவானது நனவாகும்” என்று அவர் கூறினார்.