பிரித்தானிய மகாராணியார் 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகளுக்கு தவறாக அழைப்பு விடுத்ததாக வெளிவிவகார அலுவலகத்தால் மன்னிப்பு கேட்கப்பட்ட டென்மார்க் இளவரசி தற்போது நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு குழந்தைகளுக்கு தாயாரான 50 வயதுடைய இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுள்ளது. முதல் முதலில் டென்மார்க் மகாராணியார் மார்கரெட்டுக்கும் இளவரசி மேரி உட்பட மூன்று அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பற்ற முடிவு செய்திருந்த விதிகளின் படி ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து கடைசி நிமிடத்தில், இளவரசி மேரிக்கான அழைப்பை ரத்து செய்வதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் வெளிவிவகார அலுவலகம் கூறியிருந்தது.
இருப்பினும், டென்மார்க் ராணியாரும் இளவரசி மேரியின் கணவரும் எலிசபெத் மகாராணியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இந்நிலையில் டென்மார்க் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் தமது மனைவி இளவரசி மேரியுடன் ஐக்கிய நாடுகள் மன்ற பொது அவையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். இதற்கு முன்னதாக ஃபிரடெரிக் மற்றும் அவரது தாயார் இரண்டாம் மார்கரெட் மகாராணியார் ஆகியோருக்கு லண்டனில் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது.