மகாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் ராமேஸ்வரம் கோவில் மற்றும் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் 3ஆம் அலையை தடுப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாளய அமாவசை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அதிகளவில் கூடுவார்கள். இதனால் கோவில் மற்றும் கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
எனவே வருகின்ற 5, 6ஆம் தேதியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு சென்று தர்ப்பணம் செய்யவும் கடலில் நீராடவும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தடையை மீறி கடலுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.