மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால் வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சி என அனைத்து வகையான செல்வங்களையும் நாம் பெறலாம்.
- சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
- இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.
விரதம் மேற்கொள்ளும் முறைகள்
- சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
- பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
- மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
- மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம்.
- ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோயில்களுக்கும் வழங்கலாம்.
- பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
- அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
- சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
- பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
- சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
சிவ பூஜை
- சிவராத்திரி அன்று அதிகாலை 4 மணிக்கு தான் கால பூஜைகள் நிறைவு பெறும். அதன் பின்னர் அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை நாம் வாங்கிக் கொண்டு நாம் நம் விரதத்தை நிறைவு செய்யலாம்.
- சிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.
- அங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.