நடிகர் மன்சூர் அலிகான் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் அசத்திய மறக்க முடியாத வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் மிக சிறந்த வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 90’ஸ் கிட்ஸ்களுக்குப் மிகவும் பிடித்த வில்லன்களில் ஒருவர். தற்போது மன்சூர் அலிகான் காலத்திற்கு ஏற்றவாறு வில்லன் மற்றும் சிரிப்பு கலந்த ஒருவராக , வெள்ளித் திரையில் வலம் வருகிறார். மன்சூர் அலிகான், தமிழ் மீது அதிக பற்று கொண்டுள்ளதால் ஈழ தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தனது எதிர்ப்பை தெரிவு செய்தார். தொடர்ந்து, தனது வாழ்வில் குறையில்லாமல் சினிமா, அரசியல் என வாழ்ந்து வருகிறார். சென்ற மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இவர் சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும், தனது எதிர்ப்பை அவ்வப்போது கடுமையாக முன் வைத்து வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடியையும் முதலமைச்சர் பழனிசாமியையைும் விமர்சித்து தனக்கே உரிய வழக்கமான நையாண்டி, நக்கல், பேச்சுடன் ‘ஆடியோ’ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோ இப்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், “வணக்கம் பிரதமர் நரேந்திர மோடி ஐயா. உங்களைப் போன்ற மகா நடிகனை பார்க்க முடியாது. வடக்கிற்கு செல்லாமல், 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 45 ராணுவ வீரர்களை வைத்து போட்டோ ஷூட் நடத்தினார், மோடி.
அவரின் நடிப்பு எங்களைப் போன்ற நடிகர்களுக்குக் கூட வருவதில்லை. அவர் பேசிய உரையில் சீனா என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அந்த அளவிற்குப் பயம். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் எல்லைக்கே சென்று வீர தீரமாகப் பேசி வங்க தேசத்திற்கு விடுதலை வாங்கித் தந்தார். சீனா என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த பயப்படும் மோடி, ஊரடங்கு என்று கூறி மக்களை அடைத்து வைத்திருக்கிறார். நாள்தோறும் கரோனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கூறும் நீங்கள், அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் எப்படி இறக்கிறார்கள் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதை வெளியிட வேண்டும்.
அதேபோன்று படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வேலையில்லாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய அரசியல் சட்டம் 1950 பிரிவு 14இன் படி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. சட்டம் அதுதான் கூறுகிறது. இதை செய்யாமல் 144 ஊரடங்கு போட்டு முடக்கியுள்ளீர்கள். இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகரும் வில்லனுமான மன்சூர்.