சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மையம் துணைத் தலைவர் மௌரியா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மத்திய, மாநில அரசுகளை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டக் களத்தில் வீதியில் இறங்கி இருக்கிறோம். உருமாறிய மக்கள் நீதி மையம், மக்கள் இயக்கமாக போராட்டத்தில் இறங்கி இருக்கிறது. வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அரசுகளால் ஏழை, எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
மகேந்திரன் மற்றும் பத்மபிரியா திமுகவில் இணைந்துள்ளனர். இதனை துரோகம் என்பதை தலைவர் அன்றே குறிப்பிட்டிருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். தலைவர் கமலஹாசனுக்கு அவர்கள் நன்றியுடன் இருக்கட்டும் என்று மௌரியா ஆவேசமாக தெரிவித்தார்.