பீகார் மாநிலத்தில் நஸ்ரிகஞ்ச் என்ற பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்துள்ளது. இந்தப் பாலம் கடந்து 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்த பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இதையடுத்து இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துக் கொண்டிருந்தனர். மேலும் பாலத்தை அகற்றுவதற்கு கிராம மக்களும் அவர்களுக்கு உதவி செய்தனர். அதன் பிறகு மூன்று நாட்களில் பாலத்தை முழுமையாக இடித்துவிட்டு இரும்பு துண்டுகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றனர்.
அதன் பிறகுதான் தெரியவந்தது அந்த பாலத்தை இடித்து அதன் இரும்புத் துண்டுகளை எடுத்துச் சென்றவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல கொள்ளையர்கள் என்று. தங்களின் கண்முன்னே நடந்த பயங்கர திருட்டால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.