தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் 124 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக 158 இடங்களை திமுக கைப்பற்றுகிறது.
இந்நிலையில் திமுகவின் வெற்றி குறித்து பேசிய ஸ்டாலின், “தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பதை புரிந்து திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவை கருத்தில் கொண்டு பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.