சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சுங்கச்சாவடி கட்டண விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் 5 முதல் 85 ரூபாயாகவும், சரக்கு வாகனங்களுக்கு 45 முதல் 240 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இருக்கும் வானகரம், நெமிலி, சூரப்பட்டு, சமுத்திரம், பரனூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் 5 சுங்கச்சாவடிகளையும், மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் 8 சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி 60 கி.மீ குறைவாக இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால் திடீரென சுங்க கட்டணத்தின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சுங்கக்கட்டண விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், பட்டியலா மற்றும் சம்பூர் பகுதிகளில் 10 முதல் 18 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.