மழை வெள்ள நிவாரண பணிகளில் பாரதிய ஜனதாவினர் முனைப்போடு ஈடுபட வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகமெங்கும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரண பணியில் ஈடுபடவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்களை வழங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும். பிரச்சினை இருக்கும் இடங்களில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை அணுகி தேவையான உதவிகளை மக்களுக்கு பெற்றுத் தரவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.