புதுவை அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து திருப்பமாக புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கின்றோம். இப்போது இருக்கின்ற அரசால் தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ரோடு போட முடியவில்லை, அடிப்படை வசதி எல்லா செய்து தாறோம் என்று சொல்லி இருந்தோம், ஆனால் எதையுமே செய்ய முடியாத சூழல் இருக்கிறது.
குறுகிய காலத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். அந்த தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்தில் இது மாதிரி எதுவுமே செய்யாமல் ஓட்டு கேட்டு மக்களிடம் போவதற்கு எனக்கு மனமில்லை. எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கின்றேன்.
என்னுடைய தொகுதிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார்கள். தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு அந்த நிதியை கொடுக்கவே இல்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. இந்த அரசோடு திரும்பவும் நீடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன், கட்சி தலைமைக்கு சொல்லியுள்ளேன். இன்னும் நான் திமுகவில் இருக்கின்றேன், தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்தால் காங்கிரஸ் கூட்டணி பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆக இருக்கின்றது. புதுச்சேரி அண்டை மாநிலமாக இருக்கும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.