மக்களுக்கு நல்லது செய்யவே தான் பாஜகவில் இணைந்து உள்ளதாக குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்ற குஷ்பு, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்று தேசிய பொதுச்செயலாளர் சிடி. ரவி,தமிழகத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்துள்ளார். அதன் பிறகு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்திலேயே பாஜகவில் நான் இணைந்துள்ளேன். பதவிக்காகவும், பேரம் பேசவோ இணையவில்லை.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மனசாட்சி இல்லாமல் தான் பாஜகவை விமர்சனம். காங்கிரஸ்தான் வேளாண் சட்டத்தை கொண்டு வந்தது. இருக்கின்ற இடத்தில் விசுவாசம் காட்டி தான் வந்திருக்கிறேன். இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி வதந்தி பரப்பியதே காங்கிரஸ் கட்சியினர் தான். எனது அரசியல் முடிவுகளுக்கு என் கணவர் சுந்தர் சி காரணம் என்று எவரும் கூற கூடாது. பெண் ஒருவர் புத்திசாலியாக இருக்க கூடாது என்றே நினைத்தனர். நடிகை என்று கூறியவர் தலைவர் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் பாஜகவில் இணைவதற்கு என் கணவர் காரணம் இல்லை”என்று அவர் கூறியுள்ளார்.