நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் பலனாக அதிகரிக்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது குறைந்திருக்கும் நிலையில், சென்னையிலும் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 62 ஆயிரத்து 500 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று 62 ஆயிரம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சம் அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். குறைந்தபட்சம் மணலியில் 77 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் 28,561 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயத்தில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் சென்னை, கள்ளக்குறிச்சி, மதுரை போன்ற மாவட்டங்களைத் தவிரத்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதன்கிழமையை ஒப்பிடும்போது வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
சென்னையின் தினசரி பாதிப்பு 8,007லிருந்து 7,520 ஆகக் குறைந்துள்ளது. அதே சமயத்தில் 8,011 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 நபர்களும் , கோவை, ஈரோடு, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.