நாடு முழுவதும் பரவி வரும் பறவை காய்ச்சல் முட்டை மற்றும் சிக்கன் சாப்பிடுவதால் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை விலை மிகவும் சரிந்துள்ளது. அதுமட்டுமன்றி கோழி மற்றும் முட்டை சாப்பிடலாமா என்று மக்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் முட்டை மற்றும் சிக்கன் சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கோழியை 70 டிகிரி செல்சியஸ் சூட்டில் அனைத்து பாகங்களையும் சமைத்து சாப்பிட்டால், வைரஸ் இருந்தால் கூட அது இறந்துவிடும். பறவைகளின் மலம் மற்றும் பிற நீர்த்துளிகள் மூலமாகவே இந்த காய்ச்சல் பரவும் என கூறியுள்ளனர்.