தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 200 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரொக்கப்பணம் வழங்கப்படாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நீலகிரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய மத்திய உணவு வழங்கல் துறை செயலாளர் சுதான்ஷீ பாண்டே, இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொங்கல் பண்டிகைக்காக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.