தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு எந்த பாடமும் படிக்கவில்லை. கமிஷன் அடிப்பதில் மட்டுமே கவனமாக இருந்துள்ளது. அதனால்தான் இந்த முறையும் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.