பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த கல்விக் கொள்கை இன்னும் தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த தகவல் தவறானது எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது: “பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நீண்டகாலமாக இருமொழிக் கொள்கை மட்டும் அமலில் இருக்கிறது. இதை மாற்றி மும்மொழி கொள்கையாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி தவறானது. தமிழகத்தில் தாய்மொழியாகிய தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைகள் மட்டுமே தற்போது வழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்று தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழுடன் சேர்த்து அவர்களது தாய்மொழியை விருப்ப பாடமாக படித்து தேர்வு எழுதும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. மொழிப் பாடக் கொள்கை குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.