மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இன்றும், நாளையும் லட்சத்தீவு, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். அக்டோபர் 5, 6ல் வடக்கு ஆந்திர கடலோர பகுதி, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. இன்று லட்சத்தீவு, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.