தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு என்பது அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் அதிகாலை தொடங்கி லேசான மழை என்பது பெய்து வருகிறது. இந்த சூழலில் தற்போது மழை தொடர்பான அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை என்பது பெய்யக்கூடும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழ்நாட்டில் பல்வேறு உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை, அதே போன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழையும், பரமக்குடியில் அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் மழையும், நாமக்கல், கரூர் ஆகிய பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, தமிழகம் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய காரணத்தால் இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.