வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் பலரும் அதிக அளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துகின்றனர். அதேபோல் பெரும்பாலான நகரங்களில் தற்போது வீடுகளிலும் பாட்டில் குடிநீர் உபயோகத்தில் உள்ளது. இந்த குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், தரங்கள் குறைவாக இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் அரசின் உரிமங்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
அதில் இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட உரிம எண், உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, பேட்ஜ் எண், நிகர எடை, தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும். பொதுமக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விவரங்கள் உள்ளதா ? என சரிபார்த்து வாங்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரப்பும் முன்பு கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். பாட்டில் குடிநீர் உற்பத்தியின் போது அதன் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.