தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. இந்த கொசுக்கள் கடித்தால் டெங்குக் காய்ச்சல் பரவ கூடும். இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருகிறது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் 68 பேர் மற்றும் டிசம்பர் மாதம் 10 நாட்களில் மட்டுமே 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. எனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.