நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தெலுங்கானாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பேரணி மற்றும் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.