எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 செல்போன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுகின்றன. மக்கள் அனைவரும் தற்போது பல்வேறு நிபந்தனைகளுக்காக வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண்கள் போன்றவற்றை கேட்டுப் பெற்று மோசடி நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களை வட இந்தியாவை சேர்ந்த மோசடி கும்பல் அதிக அளவு குறி வைக்கிறது. வாடிக்கையாளரின் மொபைலுக்கு தொடர்பு கொண்டு வங்கி மேனேஜர் பேசுகிறேன் என்று பொய் சொல்லி, உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாக போகிறது,கார்டு மேலே இருக்கும் 16 நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டு பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நம்பர்களை பட்டியலிட்டு அதில் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி +91-8294710946 மற்றும் +91-7362951973 ஆகிய எண்களில் அழைப்பவர்கள் மோசடியாளர்கள் என்றும் அந்த அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த எண்களில் இருந்து அதிக அளவு அழைப்பு வருகின்றது.
மோசடியான லிங்க் ஒன்றை அனுப்பி அதில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற லிங்க் வந்தால் வாடிக்கையாளர்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இந்த மொபைல் எண்களை பதிவு செய்து பிளாக் செய்வதன் மூலம் மோசடி அழைப்புகளை தவிர்க்கலாம் எனவும் எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.