மக்களுக்கு தேவையான ஆதார்அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் உள்ளதாக புகார் வந்ததை அடுத்து இரட்டைவாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஆதார்அட்டையை இணைப்பதன் வாயிலாக வாக்காளர்களின் தனிதகவல்களை உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்ய உள்ளது.
இப்பணிகள் சென்ற 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 31/03/2023 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்களிடம் விருப்பத்தின்படி படிவம் 6 பி வாயிலாக ஆதார் எண்களின் விபரங்களை தெரிவித்து இணைத்துகொள்ளலாம். (அல்லது) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று விருப்பத்தின்படி ஆதார் எண் விபரங்களை படிவம் 6 பி வாயிலாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியை செய்வார்கள்.
மேலும் இ சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் போன்றவை வாயிலாக வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, அனைத்து வாக்காளர்களும் தானாக முன் வந்து ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இனைத்து மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை 100 % தூய்மையாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.