தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்று அழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி அதன் உபபொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்புவகைகள், ஐஸ்க்ரீம் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி வெளிச் சந்தையை ஒப்பிடும்போது தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், இனிப்புவகைகள் ஆகிய பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஏழை எளிய மக்கள் ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களையே வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆவின் விற்பனைநிலையங்களில் தயிர் மற்றும் நெய் விலையை அதன் நிர்வாகமானது அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு தயிர், லஸ்ஸி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டி வரியை விதித்ததால், ஆவின் நிர்வாகம் இந்த விலை உயர்வை அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஆவின் பொருட்களின் விலை உயர்வு மக்களை அதிக அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தயிர் 100 கிராம் 10 ரூபாயில் இருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூபாய் 100-ல் இருந்து ரூபாய் 120 ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 535-ல் இருந்து ரூபாய்.580 ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூபாய்.275-ல் இருந்து ரூபாய்.290 ஆகவும் அதிகரிக்கிறது. 1 லிட்டர் நெய் ரூபாய் 50, 1லிட்டர் தயிர் ரூபாய் 10 அதிகரித்து உள்ளது. அத்துடன் ஆவின் பிரிமியம் கப்தயிர் ரூபாய் 40ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் 1 கிலோ ரூபாய் 100ல் இருந்து ரூபாய் 120 ஆகவும் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து 200 மிலி பாக்கெட் லஸ்ஸி ரூபாய்.20, புரோபயோடிக் லஸ்ஸி ரூபாய் 27ல் இருந்து ரூபாய்.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூபாய் 15ல் இருந்து ரூபாய் 18 ஆகவும், 200 மிலி மோர்பாட்டில் ரூபாய் 10ல் இருந்து ரூபாய் 12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் 50 கிராம் தயிர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூபாய் 5க்கு விற்கப்படுகிறது.