தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பால் கொள்முதல் மற்றும் பால் வினியோகம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் காணொளி மூலமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 2015ம் வருடத்தில் அரசின் கவனக் குறைவின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது.
அப்போது அரை லிட்டர் பாக்கெட் பால் 150 முதல் 200 வரை விற்கப்பட்டது. தற்போது அந்த நிலைமை நடந்துவிடக்கூடாது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற காரணத்தினால் இன்றும் சிறப்புடன் ஆவின் நிர்வாகம் செயல்படுகிறது என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றி ஆவின் பால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வாட்ஸ் அப் குழு உருவாக்கி தகவல்களை பகிர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.