கடந்த சில மாதங்களாக பெருகி வரும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை அடுத்து மலேசியாவின் தீவு நகரமான சபாவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சபாவில் தற்போது அமலில் இருக்கும் கடல் ஊரடங்கு உத்தரவு அடுத்த 14 நாட்களுக்கு அதாவது ஜூன் 24 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியாட்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சபா போலீஸ் கமிஷனர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறியுள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு சபா தவிர தவாவ், செம்போர்னா, குனாக், லஹாட் டத்து, கினாபடங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் ஆகிய இடங்களில் இருந்து மூன்று கடல் மைல்கள் வரையிலான பகுதிகளை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆட்கடத்தல்-பரிசீலனை குழுக்கள் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளின் நீடித்த அச்சுறுத்தல் காரணமாக இந்த நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.