2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை..
எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பொங்கல் பரிசோடு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் 2023 ஜனவரி 9-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. நாளொன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பண விநியோக பணியினை மேற்கொள்ள ஜனவரி 13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைப்பேசி 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.