தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலையங்கள் முழுவதும் நிரம்பின. பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கம் முதலே மழையின் தாக்கம் குறைந்துள்ளது.
அவ்வப்போது மட்டும் சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.