வண்ண வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலுவலகத்தில் “கியோஸ்க்”அமைப்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு அலுவலகங்களில் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கியது வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வினியோகிக்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
அதனைப்போலவே அடையாள அட்டை தொலைந்தால் அல்லது சேதம் அடைந்தால் பழைய கருப்பு வெள்ளை அட்டை கைமாற்றாக வண்ண வாக்காளர் அட்டை பெற பொது இ- சேவை மையங்களில் 25 ரூபாய் கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அட்டை அச்சிட்டு பெறும் வசதியும் உள்ளது. ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் வாக்காளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை தவிர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள “கியோஸ்க்”எனப்படும் கணிப்பொறி கருவி வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்குச் சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம். விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு மொபைல் எண்ணில் SMS அல்லது QR கோட் வரும். இதனை பயன்படுத்தி அட்டையை பெறலாம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த அமைப்பை வடிவமைத்துள்ளது.