தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் பி மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது நடைமுறைக்கு வந்த பிறகு இது குறித்து சோதனை செய்யும்போது முதல் முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவார்கள். மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.