தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அந்த சொத்துக்கள் குறித்த கடன் மற்றும் வழக்கு நிலுவை உள்ளிட்ட விபரங்களை அறிய வருவாய் துறை இணையத்தில் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வீடு, மனை விற்பனையின் போது, அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிய வில்லங்கச்சான்று பெறுவது வழக்கம். அதனை ஆன்லைன் முறையில் பெற வசதி உள்ளது. இதில் சொத்து தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் வரும்.
அதிலும் பொது அதிகாரம், உயிர் மற்றும் ஆவணம் ஒப்படைப்பு இல்லாத அடமானம் பெற்ற விபரங்கள் வராது. மேலும் விற்பனைக்கு வரும் சொத்து, வேறு ஏதாவது வங்கிக் கடனில் இணைக்கப்பட்டுள்ளதா, வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதை மக்கள் எளிதில் அறிய முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் வருவாய் துறை இணையதளத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் குறித்த வில்லங்க விவரங்கள் மற்றும் சொத்து சரிபார்ப்பு எல்லாம் மத்திய பதிவேடான “செர்சாய்” இணையதளத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த சேவை தற்போது தமிழக அரசின் வருவாய்த் துறை இணைய தள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் நில அளவை வரைபடம் மற்றும் பட்டா உள்ளிட்ட விவரங்களை சரி பார்ப்பது போன்று இந்த சேவையையும் மக்கள் பயன்படுத்தலாம். இதன் மூலமாக அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். தற்போது இது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அமலுக்கு வரும் என்று அவர் தெரிவிக்க வேண்டும்.