நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், இணையம் வாயிலாக டெல்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். விழிப்புடன் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவசியமில்லாமல் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இப்போது உள்ள நிலவரப்படி ஐசியூ படுக்கைகள் தேவைப்படாது. ஏனெனில் தற்போது பரவும் கொரோனா குறைந்த அளவிலான அறிகுறிகளே உள்ளன. தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை. தனிமனிதர்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்தாலே கொரோனா பரவலை குறைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.