தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.