தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 14 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 94 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியை குறித்த காலத்திற்குள் செலுத்தாமல் உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்த தவறியவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.