வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கண அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதினால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் உள்ள ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகின்றது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர்தான் தண்ணீர் திறக்கப்படுகின்றது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இழப்பு 43.47 டிஎம்சி யாகவும் இருக்கிறது.