பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல், போன்ற தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதனை மீறி பட்டாசுகளை எடுத்து சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் முதல்முறையாக பிடிபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இதனையடுத்து அவர்கள் மீண்டும் பிடிபட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் இது குறித்து அடுத்த வாரம் முதல் நாங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேலும் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.