ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்ற பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஸ்திகா(19) என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவர் நேற்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்ற நபருடன் செல்போனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கும் சரியாக சிக்னல் கிடைக்காததால் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடியுள்ளார்.
அதன் பிறகு இரவு 7 மணிக்கு மீண்டும் கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தபோது ஆஸ்பெஸ்டாஸ் கூரை வலுவிழந்து உடைந்தது. அதனால் பிகாஸ்திகா தலை, கை மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.